Sunday, March 17, 2013

மாணவர்களை தூண்டுகிறாரா ஜெயலலிதா? உளவு பார்க்க வந்த உளவுத்துறை!



தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்தன. புலியை சரியான நேரத்தில்தானே தொடுகிறார் ஜெயலலிதா?
ஈழப் பிரச்சினையை வைத்து தமிழகம் கொந்தளிக்கும் கடலாக மாறிக்கொண்டு இருக்கும் நேரத்தில், என்னதான் வனத்துறை விழாவாக இருந்தாலும் புலிப் படங்களைப் போட்டு விளம்பரம் செய்வதற்குத் தைரியம் வேண்டும். 'செய்துதான் பார்ப்போமே’ என்ற ஒரு உள்நோக்கமும் இருக்கலாம். இருக்கலாம்!
இதுதான் மத்திய அரசுக்கு, தமிழக அரசு மீது மிகப் பெரிய நெருடலை உருவாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் நடக்கத் தொடங்கி இருக்கும் மாணவர் போராட்டங்களை, மாநில அரசாங்கமே மறைமுகமாகத் தூண்டிவிடுகிறதோ?’ என்ற அச்சம்தான் அது.
ஆசியத் தடகள சாம்பியன் போட்டியைத் தமிழகத்தில் நடத்த எதிர்ப்பு, உள்துறையின் தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கக் கண்டனம், மதக் கலவரத் தடுப்பு மசோதா மீது விமர்சனம், ஐ.ஏ.எஸ். தேர்வு விஷயத்தில் மத்திய அரசின் புதிய விதிமுறையை மாற்றக் கோருவது... என்று, அடுத்தடுத்து மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களிலும் தனது எதிர்ப்பை முதல்வர் ஜெயலலிதா பதிவுசெய்து வருவது மத்திய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்குப் பதிலடி கொடுப்பது மாதிரி, மின்சாரம், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விஷயத்தில் ஏற்கெனவே தந்த அளவை மத்திய அரசு குறைத்துக்​கொண்டது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை, மாநில அரசு நினைத்திருந்தால் என்றோ அடக்கி​யிருக்க முடியும் என்பதும் மத்திய அரசாங்கத்தின் நினைப்பு.
இதன் தொடர்ச்சியாகத்தான் இலங்கைப் பிரச்னையையும் பார்க்கிறார்கள்.
முக்கிய கட்சித் தலைவர் ஒருவர், இன்னொரு தலைவரிடம் பேசும்போது, இந்த மாணவர் போராட்டத்தை அந்த அம்மாவே தூண்டிவிடுவதுபோலத் தெரியுது. மத்திய அரசாங்கத்துக்கு இதன் மூலமா நெருக்கடி கொடுக்க நினைக்குது’ என்று சொன்னாராம்.
இலங்கைப் பிரச்சினையில் நாம்தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டும். ஆனால், நாம் செய்ய வேண்டிய அனைத்தையுமே முதல்வர் ஜெயலலிதா கனகச்சிதமாய் செய்துவருகிறார்’ என்று, ஈழ ஆதரவுத் தலைவர்களும் சொல்கிறார்கள்.
அரசாங்க ஆதரவு இருப்பதால், ஈழ ஆதரவுத் தலைவர்கள் இன்னும் ஆக்ரோஷமாகப் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்’ என்றும் பேச்சு. இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்குப் போனது.
அதிரடிப் போராட்டங்கள் அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் அரங்கேறலாம்’ என்ற அதிர்ச்சி தகவல்களை ஐ.பி. அதிகாரிகள் மூலம் கேள்விப்பட்ட டெல்லி மேலிடம் அதிர்ந்துபோனது.
அதன் பிறகே, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் மத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதன் பின்னணியை உன்னிப்புடன் கவனிக்க ஆரம்பித்தது.
சமீபத்தில் வேளாங்கண்ணிக்கு வந்த இலங்கைப் பிரமுகர் அடித்து விரட்டப்பட்டார். தப்பித்து திருச்சிக்கு வந்த அவர் மீது முட்டை வீசப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் நெருங்கிய உறவினருக்கு இராமேஸ்வரத்தில் அடி உதை விழுந்தது. இந்தச் சம்பவங்கள் மீடியா முன்னிலையில் நடந்தன.
இலங்கை வீரர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதை ஏன் முன்கூட்டியே தமிழக பொலிஸ் தடுக்கவில்லை என்று தனது அதிருப்தியை மத்திய அரசிடம் பதிவுசெய்தது இலங்கை அரசு.
இதைப் பற்றி தமிழக உள்துறையிடம் விளக்கம் கேட்டபோது, சரிவரப் பதில் வரவில்லையாம். 'எங்களிடம் சொல்லாமல் வருகிறார்கள். மத்திய அரசும் அவர்களின் வருகையை எங்களிடம் சொல்வது இல்லை. தமிழகத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது' என்றெல்லாம் முதல்வர் ஜெய​லலிதா அறிக்கை விட்டதை கோபப் பார்வையுடன் மத்திய அரசு பார்க்கிறது.
முந்தைய போராட்டங்களை பொலிஸ் கண்டுகொள்ளாமல் விட்டதன் தொடர்ச்சிதான், இப்போதைய கல்லூரி மாணவர்களின் உக்கிரப் போராட்டம் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதைக் கண்டுகொள்ளாமல் பொலிஸை கைகட்டி வேடிக்கைப் பார்க்கச் சொல்லி, இதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக மக்களின் மனோநிலை திரும்பட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா நினைப்பதாக அவர்கள் யோசிக்கிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.
மாணவர்கள் மட்டுமா? வக்கீல்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும்தானே போராடுகிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழகத்​தையும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா திருப்பி விடுவதாக மத்திய அரசு நினைக்கிறதோ?
ஆமாம். அந்தப் படலம்தான் இப்போது ஆரம்பமாகிவிட்டது. 'போராட்டங்கள்... தமிழக மாணவர்களின் உளப்பூர்வமான வெளிப்பாடு' என்பதை மத்திய அரசு முழுமையாக நம்பவில்லை.
இறுதிப் போர் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது மூர்க்கத்தனமாக ஏன் போராட்டம் பரவுகிறது?’ என்று, மத்திய உள்துறையிடம் ஆட்சி மேலிடம் கேட்டிருக்கிறது.
ஐ.நா. தீர்மான விஷயத்தில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இவ்வளவு எதிர்ப்பா?’ என்று திகைக்கிறார்கள். இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸோ, அதனுடன் கூட்டணி சேரும் கட்சியோ மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
அதற்கான திட்டங்களை அரங்கேற்றி வருவதாக மத்திய அரசு நினைக்கிறது. இதை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாற்ற நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறதா? மத்திய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் எங்கெங்கே தாக்கப்பட்டன? அவை மீது பொலிஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்த வன்முறை நிகழ்வுகளின்போது பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்தார்களா? மாநில அரசு அவர்களுக்கு என்ன உத்தரவு பிறப்பித்திருக்கிறது? என்பதை இரகசிய ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு தமிழகம் வந்து சென்றதாக ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களின் பட்டியல்களையும், கூலிப் படை அராஜக சம்பவங்களையும் திரட்டினார்களாம். தாங்கள் திரட்டிய தகவல்களுடன் நேராக டெல்லிக்குப் போய்விட்டார்களாம்.
மத்திய குழு வந்து சென்றது தமிழக முதல்​வருக்குத் தெரிய வந்ததாகவும், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதை எரிச்சலுடன் கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
அடுத்த கட்டமாக, சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதால் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தற்காலிகமாக மூடும்படி தமிழக அரசுத் தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படலாம் என்கிறார்கள். இதுவும் செய்யப்பட்டால், நெருக்கடி இன்னும் முற்றும்.
மத்திய அரசு அலுவலகங்கள், இலங்கை தொடர்புடைய அரசு மற்றும் தனியார் நிறுவனங்​களுக்கு முதல் கட்டமாக பாதுகாப்பு கொடுப்பதற்காக மத்திய அரசு துணை நிலை இராணுவத்தை அனுப்பி வைக்கப் போகிறது.
1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடந்தபோது இராணுவம் இங்கு வந்தது. ஒருவித பதற்றமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது என்று சொல்லிவிட்டு, மாறினார் கழுகார்.
இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் வெளியிடப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment