Wednesday, May 26, 2010

புரூஸ் லீ


புரூஸ் லீ
Bruce Lee


நடிகன்

பிறப்புநவம்பர் 27 1940
சான் பிரான்சிஸ்கோ,கலிபோர்னியா, Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
இறப்புஜூலை 20 1973 (அகவை 32)
ஹொங்கொங்

புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27,1940 - ஜூலை 20 1973) அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.

புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.

1940 27, நவம்பர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு கத்தோலிகர்.

புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.

நடிகராக

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது ’தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’ , 'ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'கிரவுன் காலனி சா சா’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.

புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'வே டு த டிராகன்' படத்தின் இறுதிக்காட்சியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக் நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார்.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

மரணம்

ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.

ஜீட் குன் டோ

கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.

உடற்பயிற்சி

புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.

புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

சிலை

திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.

நடித்துள்ள திரைப்படங்கள்

  • என்டர் த டிராகன்
  • த பிக் பாஸ்
  • ரிட்டன் ஆவ் த டிராகன்
  • ஃவிஸ்ட் ஆவ் ஃவியூரி
  • வே ஆவ் த டிராகன்

No comments:

Post a Comment