கிளிநொச்சி: இலங்கை கிளிநொச்சி கணேசபுரத்தில் மலக்குழி ஒன்றில் மூட்டை மூட்டையால் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மலக்குழி ஒன்றில் ஏராளமான சடலங்கள் காணப்படுகின்றன.
குறிப்பிடப்பபட்டுள்ள இடத்தில் துப்புரவு தொழிலாளர்கள் குழியில் நிரப்பப்பட்டிருந்த மணலை வெளியிலெடுக்க முனைந்தபோது, குழியினுள் கறுப்பு பைகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூட்டைகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் இருந்தன.
ஐந்து மூட்டைகள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றைப் பார்த்துச் சென்றவண்ணம் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதியிடம், யாரும் புகார் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்ச நிலையும் எழுந்திருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப் பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போர்க்காலத்தில் இந்த கொடூரங்கள் நடந்ததா, அல்லது முகாம்களில் அடைக்கப்பட்டு கணக்கில் வராமல் போன தமிழர்களில் ஒரு பகுதியினரது பிணமா இவை என்று கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment