விமானத்தில் எரிபொருள் காலியாகிவிட்ட நிலையிலும் 3 விமானங்களை வானில் வட்டமடிக்கவிட்டு பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது டெல்லி விமான நிலையம்.
மங்களூர் விமான விபத்து நடந்த சில நாட்களில் கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அன்றைய தினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீனாவுக்குப் புறப்பட்டார். அதே போல இந்தியா வந்துள்ள துர்க்மேனிஸ்தான் அதிபர் பெர்டிமுன்ஹா மெடோவ் ஆக்ராவுக்குச் சென்றார். இருவரது சிறப்பு விமானங்களும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்ப இருந்ததால், பாதுகாப்பு கருதி மற்ற அனைத்து விமானங்களும் கடைசி நேரத்தில் டெல்லியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பையில் இருந்து டெல்லி வந்த ஜெட்லைட் நிறுவன போயிங் 737 விமானம் (JLL 108), ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டபோது அதில் போதுமான எரிபொருள் இல்லை. இருப்பினும் அந்த விமானம் ஜெய்ப்பூர் செல்ல உத்தரவிடப்பட்டது. இதையடுத்த அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. அப்போது அதில் வெறும் 3 நிமிட எரிபொருளே மிச்சமிருந்தது.
அதே போல மும்பையில் இருந்து டெல்லி வந்த கிங்பிஷ்ஷர் ஏர்பஸ் 330 விமானம் (IT 300) ஜெய்ப்பூரில் தரையிறங்கியபோது, அதில் அடுத்த 10 நிமிடம் மட்டுமே பறப்பதற்கான எரிபொருளே மிச்சமிருந்தது.
சென்னையிலிருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் (9W 2357) நிறுவனத்தின் போயிங் 737 விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. அது தரையிறங்கும்போது அதில் 13 நிமிடம் பறப்பதற்கான எரிபொருளே மிச்சம் இருந்துள்ளது.
இந்த மூன்று விமானங்களிலும் 450 பயணிகள் இருந்தனர். இந்த மூன்று விமானங்களின் பைலட்டுகளும் இனிமேல் பறக்க முடியாது என்று எமர்ஜென்சி நிலையை அறிவித்த பிறகே, ஜெய்ப்பூரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் அன்றைய தினம் 11 விமானங்கள் சண்டீகர், லக்னெள, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. மேலும் 20 விமானங்கள் தரையிறங்க முடியாமல் டெல்லியை சுமார் 1 மணி நேரம் சுற்றிக் கொண்டே இருந்தன.
காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த நெருக்கடி, பிரதீபாவும் மெடோவும் டெல்லியைவிட்டுக் கிளம்பிய 10 மணி வரை தொடர்ந்தது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அப்ரோச் ரேடார் எனப்படும், விமானங்களின் இயக்கத்தை கண்டறியும் ரேடார் இல்லை. விமானங்கள் தரும் தகவலை வைத்தே அவற்றின் வேகம், திசையை ஜெய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தால் அறிய முடியும்.
அத்தோடு அங்கு தூசிப் புயலும், வேகமான காற்றும் சேர்ந்து கொள்ள ஜெய்ப்பூரில் தரையிறங்க விமானங்கள் மிகவும் சிரமப்பட்டன.
இந்தத் தகவல்களை இந்த 3 விமானங்களின் பைலட்டுகளும் தரையிறங்கவுடன் புகாராகப் பதிவு செய்துள்ளனர். எரிபொருள் குறித்து கவலைப்படாமல் திடீரென விமானங்களை வேறிடத்துக்கு போகுமாறு கூறுவது, வானிலேயே சுற்றவிடுவது ஆகியவை குறித்து விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் flight safety report-ல் பதிவு செய்துள்ளனர்.
விஐபிக்கள் விமானங்கள் காரணமாக விமான நிலையம் மூடப்படுவது குறித்து முன்கூட்டியே தரப்படும் 'Notam' (notice to airmen) என்ற தகவல் டெல்லிக்கு வரும் வரை தரப்படவில்லை என்று பைலட்டுகள் புகார் கூறியுள்ளனர்.
ஆனால், விஐபிக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 'Notam' தகவல் தருவது நிறுத்தப்பட்டுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக விஐபி விமானங்களுக்காக 3 நிமிடங்கள் மட்டுமே விமான நிலையம் மூடப்படும். ஆனால், கடந்த புதன்கிழமை ஆக்ராவில் நிலவிய மோசமன வானிலையால் துர்க்மேனி்ஸ்தான் அதிபரின் விமானம் கிளம்புவது தாமதமாகிவிட்டது. இதனால் தான் விமான நிலையம் 1 மணி நேரம் மூடப்பட்டது என்று கூறியுள்ளனர் அதிகாரிகள்.
No comments:
Post a Comment