Wednesday, June 2, 2010

சிங்கம் - ஒரு பப்ளிசிட்டி?

பொதுவாக 10 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்றே பழக்கப்பட்டவர்கள் தியேட்டர்காரர்கள்.

அதிலும் இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற பேதமில்லாமல், எல்லா வகுப்புக்கும் ஃப்ளாட் ரேட்டில் கட்டணம் வசூலிப்பது தமிழகமறிந்த ரகசியம்.

ஆனால் நாங்கள் அப்படி இல்லையாக்கும், என்று காட்டிக் கொள்ள ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள் ஈரோடு தியேட்டர்காரர்கள்.

சமீபத்தில் திரைக்கு வந்த சிங்கம் படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்க சொல்லி, ஈரோட்டில் தியேட்டர் ஊழியர்கள் மீது யாரோ சில மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் தாக்குதல் நடத்தினார்களாம். இதற்காக அனைத்து தியேட்டர்களிலும் நேற்று ஒருநாள் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டனவாம்!

சிங்கம் திரைப்படம் கடந்த 28-ந் தேதி ஈரோடு நகரில் 4 தியேட்டர்களில் ரிலீசானது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு தியேட்டருக்கு காரில் வந்த 12 பேர் கொண்ட மர்ம கும்பல் தியேட்டரில் இருந்த ஊழியர்களிடம் சென்று, சிங்கம் படத்துக்கு 10 ரூபாய் டிக்கெட்டை ரூ.150-க்கு விற்க வேண்டும் என்று கூறியதாம். ஆனால் தியேட்டர் ஊழியர்கள் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். இதனால் மர்ம கும்பலுக்கும், தியேட்டர் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம கும்பல் தியேட்டர் ஊழியர்கள் 3 பேரை தாக்கி விட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுவிட்டதாம்.

இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலை கண்ணனிடம் நேற்று காலை ஈரோடு நகர தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் புகார் தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

அதைத் தொடர்ந்து ஈரோட்டில் சிங்கம் படம் திரையிடப்பட்டு உள்ள 4 சினிமா தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஒரு நாள் காட்சிகள் ரத்து

சிங்கம் படத்துக்கான கட்டணத்தை அதிக அளவில் வசூலிக்க வேண்டும் என்று கூறி, மர்ம கும்பல் தியேட்டர் ஊழியர்களை தாக்கிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈரோடு நகரப்பகுதியில் உள்ள 15 தியேட்டர்களில் நேற்று அனைத்து சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பாக அனைத்து தியேட்டர்களின் முன்பும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

மக்களுக்கும் எங்களுக்கும் சுமூக உறவு!

இந்த சம்பவம் பற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் 'ரோகிணி' பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "திரையரங்க உரிமையாளர்கள் எப்போதுமே பொதுமக்களுக்கு சாதகமாகவே நடந்துகொள்கிறார்கள் என்பது, ஈரோடு சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது. 10 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு விற்கச் சொல்லி அராஜகம் செய்வது நியாயமா? பொதுமக்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் உள்ள உறவை சீர்குலைக்க முயற்சித்து இருக்கிறது, ஒரு கும்பல்..." என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment