Saturday, June 5, 2010

ஆதாம் பாலம்


ஆதாம் பாலத்தின் விண்வெளி புகைப்படம் (NASA) வலது பக்கம் இந்தியா, இடது பக்கம் இலங்கை

ஆதாம் பாலத்தின் வரைபடம்

ஆதாம் பாலம் (Adam's Bridge) என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன.

2005 ஆம் ஆண்டு இந்திய அரசு இப்பாலத்தை சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி அருகே ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும். ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் ராமகர்மபூமி இயக்கம் ஈடு பட்டுள்ளது.

புராணம்

புராணக்கதையான இராமாயணத்தில் இராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நாசாவின் விண்வெளி புகைப்படத்தில் காணப்படும் இந்த பாலத்தை சில இந்து அமைப்புகள் இதற்கு சான்றாக கருதுகின்றன. ஆனால் நாசா இதை சான்றாக அங்கீகரிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி

இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது.சில புவியியல் வல்லுனர்கள் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். செப்டம்பர் 2007ஆம் ஆண்டு மத்திய அரசு உச்சநீதிமன்றதிற்கு அளித்த அறிக்கையில் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் (geological survey of India) நடத்திய ஆராய்ச்சியில் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நிருபிக்கப்பட்டது.

No comments:

Post a Comment