Sunday, June 6, 2010

சிவயோக சுவாமி

சிவயோக சுவாமி

சிவயோக சுவாமி
Yogaswami.jpg
பிறப்பு மே 29 1872
மாவிட்டபுரம், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு 1964 (அகவை 92)
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்

சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.

வாழ்க்கைக் குறிப்பு

அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.

கல்வி


Pencil drawing of Siva Yogaswami

கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.

அரசுப் பணி

பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.

தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது.

செல்லப்பா சுவாமிகளுடன் ஐக்கியமாதல்

1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "யாரடா நீ ?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.


யோகசுவாமிகள்

கொழும்புத்துறையில் ஆசிரமம்

குரு தீட்சை பெற்று கொழும்புத்துறைக்குச் சென்று, அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிறிது காலம் மோன சுகத்தில் திழைத்தார். செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களிலும் மரியாதை இவருக்குக் கிடைக்கப்பெற்றது. டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.

சமாதி

மார்ச் 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார்.

நான்கு மகாவாக்கியங்கள்

செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். இவற்றை அவரது பக்தர்கள் மகா வாக்கியங்கள் எனப் பின்னாளில் வகைப்படுத்தினர். அவை பின்வருவன:

  1. எப்பவோ முடிந்த காரியம்
  2. நாம் அறியோம்
  3. ஒரு பொல்லாப்பும் இல்லை
  4. முழுதும் உண்மை

சுவாமிகளின் கையெழுத்து

நற்சிந்தனை

யோகசுவாமிகள் தன்னை நாடி வந்த பக்தர்களின் மனக்குறையை நீக்கும் பொருட்டும் அவர்களுக்கு இறை சிந்தனையை ஊட்டும் பொருட்டும் தன்னிடம் சுரந்த ஞான பானத்தை கீர்த்தனங்களாகவும், கவிதைகளாகவும் அவரவர் பக்குவத்திற்குத் தக பாடியருளினார். இவற்றை அவரது அணுக்கத்தொண்டர்கள் தொகுத்து நற்சிந்தனை என்னும் திருநூலாக வெளியிட்டனர். நற்சிந்தனை என்னும் ஒரு தமிழ்ச் சொல்லை தமிழிற்கு அறிமுகப்படுத்தியவர் யோக சுவாமிகளே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[3]

அருள்மொழிகள்

சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகள்,சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி, சிறிகாந்தா என்பவர்களுக்கு அவ்வப்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் அருளிய தெள்ளிய உயர்ஞான ரசங் கொண்ட அமுத வாசகங்களை சந்த சுவாமிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "The Words of Our Master" என்னும் தலைப்பில் சிவதொண்டன் சபையினூடாக வெளியிட்டார். பின்னர் செல்லத்துரை சுவாமிகள் இதனை எங்கள் ஆசான் அருள்மொழிகள் எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டார்.


துறவுச் சீடர்கள்

யோகசுவாமிகள் இந்நிலவுலகில் உலவிய காலத்தில் ஆயிரக்கணக்கான பல்சமய, பல்மொழி அடியவர்கள் அவரது அணுக்கத் தொண்டர்களாக இருந்தனர். ஆனால் அவர்களில் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றி துறவுச்சீடராகப் பரிணமித்தவர்கள் மூவரே.

  1. மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் கைதடியில் தென்னோலைக் கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தவர்.
  2. சந்த சுவாமி. இவர் இலங்கையின் கடைசி ஆங்கிலேய தேசாதிபதி சோல்பரி பிரபுவின் மகன். யோக சுவாமிகளைப் போலவே வேட்டி துண்டுடன் யாழ்ப்பாணக் கோவில்களில் உலாவியவர்.
  3. செல்லத்துரை சுவாமி, இவர் சுவாமிகளின் பணிப்பிற்கிணங்க சுமார் அரை நூற்றண்டு காலம் யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு சிவதொண்டன் நிலையங்களில் இருந்து பணியாற்றி 2006 ஆம் ஆண்டு சமாதியடைந்தார்[4].

“சாமி என்றிருக்கிறவர் தானும் மற்றவர்களை போலென்று எண்ணவேண்டும்” என்பதும் "நீங்களும் சுவாமி பண்ணவேண்டாம், மற்றவர்களையும் சுவாமி பண்ண விடவேண்டாம்" என்பதும் சுவாமிகளின் வாக்குகள்.

மேற்கோள்கள்

  1. ↑ சிவதொண்டன் மலர் 2005
  2. யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள், சைவநன்மணி நா. செல்லப்பா
  3. ↑ நற்சிந்தனை ஆறாம் பதிப்பு 2009, சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்]
  4. ↑ சிவதொண்டன் மலர்-2006,2007.
  5. ↑ எங்கள் ஆசான் அருள்மொழிகள், 1974 தொகுப்பு: அ.செல்லத்துரை

No comments:

Post a Comment