ரஜினி வீட்டுக்கே போய் விருது வழங்கிய விஜய் டிவி
சென்னை: சிறந்த நடிகருக்கான செவாலியே சிவாஜி விருதை ரஜினியின் வீட்டுக்கே போய் வழங்கியது விஜய் டிவி.
சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வரும் விஜய் டிவியின் விருது விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
'செவாலியே சிவாஜி விருது'க்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரஜினி இந்த விழாவுக்கு வரவில்லை. எனவே விருதை ரஜினியின் வீட்டுக்கே சென்று நடிகர் பிரபுவும், அவரது அண்ணன் ராம்குமாரும் வழங்கினார்கள்.
ஏற்கெனவே ஒருமுறை சிறந்த நடிகருக்கான விருதை, பொள்ளாச்சிக்கே போய் குசேலன் படப்பிடிப்பிலிருந்த ரஜினியிடம் கொடுத்து விஜய் டிவி என்பது நினைவிருக்கலாம்.
சிறந்த மக்கள் அபிமான ஹீரோ விருது நடிகர் விஜய்க்கும், அபிமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.
நாடோடிகள் நடிகை...
சிறந்த துணை நடிகைக்கான விருது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கு வழங்கப்பட்டது. இவர் வாய் பேச முடியாதவர்.
மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக மேடைக்கு வந்த அபிநயாவுக்கு நடிகர் நந்தா, ஷக்தி, நடிகை காம்னா ஆகியோர் விருதை வழங்கினார்கள். அப்போது ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.
இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, அபிநயா என் பிள்ளை மாதிரி. படத்தில் சசிகுமாரின் தங்கையாக வாய் பேசமுடியாத அபிநயாவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது, சசிகுமார், இது முடியுமா? என்று கேட்டார். முடியும் என்றேன். என் எதிர்பார்ப்புக்கும் மேலாக அபிநயா நடிப்பில் ஆச்சரியப்படுத்தினார் என்றார்.
தொடர்ந்து மற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது காஞ்சீவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த நடிகை விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த நடிகை பூஜாவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை 'பசங்க' படத்தில் நடித்த விமல் பெற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்பியும், நடிகை குஷ்புவும் விருதை வழங்கினார்கள்.
சிறந்த புதுமுக நடிகை விருதை நாடோடிகள் படத்தில் நாயகியாக நடித்த அனன்யா பெற்றுக்கொண்டார். சிறந்த புதுமுக டைரக்டர் விருதை 'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினும், துரை தயாநிதியும் இணைந்து வழங்கினார்கள்.
சிறந்த வில்லனுக்கான விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது 'சிவா மனசுல சக்தி' படத்தில் நடித்த சந்தானத்துக்கு கிடைத்தது.
நடிகர்கள் கமல்ஹாசன், கார்த்திக், விஜய், சூர்யா, நடிகைகள் கவுதமி, ரீமாசென், அஞ்சலி உள்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment