மாமல்லபுரம் 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது. இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
மகாபலிபுரம் | |
மகாபலிபுரம் | |
அமைவிடம் | |
பரப்பளவு | கிமீ² |
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை - மக்களடர்த்தி | 12,049 - |
ஐந்து இரதம்
இயற்கையான பாறையைச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர் போல காட்சியளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தையுடைய தர்மராஜ இரதம், சாலை சிகரத்தையுடைய பீம இரதம், சதுரமான சிகரத்தையுடைய திரௌபதி இரதம் மற்றும் கெஜபிருஷ்டம் சிகரத்தையுடைய நகுல-சகாதேவ் இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காக தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். தர்மராஜ இரதத்தில் காணப்படும் அழகு வாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும் மேலும் பல்லவ-கிரகந்த எழுத்துக்கள் பொறிப்புடைய முதலாம் நரசிம்மவர்மனின் விருது பெயர்களும் அந்த இரதத்தில் காணப்படுகின்றன.
அர்ச்சுனன் தபசு
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்-படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.
மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம். இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
எப்படிப் போகலாம்?
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.
ஐந்து இரதம் | யானை சிற்பம் |
மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்
மாமல்லபுரம் வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம். சிற்பம் எனும் போது அதனுள் கட்டிடங்கள், அவற்றின் கூறுகள், அலங்கார வடிவங்கள், உருவச் சிற்பங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்குவது இந்திய மரபில் பொதுவாகக் காணப்படுவது. எனினும் மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள் என்னும் இக்கட்டுரை புடைப்புச் சிற்ப வகையில் அமைந்த உருவச் சிற்பங்கள் அவற்றை உள்ளடக்கிய நிகழ்வுகள் கதைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிற்பங்கள் ஆகியவை பற்றியே எடுத்துக்கூறுகின்றது.
பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் புகழ் பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணிக்குரிய கட்டிடங்களும் அமைப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. கல்லிலே கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்த கட்டிட வகைகளான குடைவரைகள், ஒற்றைக்கல் தளிகள் என்பனவும் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த கட்டுமானக் கோயில்களும் இங்கே உள்ளன. இவை வெறும் கட்டிடங்களாக மட்டுமன்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டு விளங்குகின்றன.
மாமல்லபுரத்தில் காணப்படும் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவை. இவை கடவுளரின் உருவங்கள், புராணக் கதை நிகழ்வுகள் என்பவற்றுடன் இயற்கை வனப்புகளையும், அக்காலத்துச் சமூக நிகழ்வுகளையும் கூடப் படம்பிடித்துக் காட்டுகின்றன எனலாம். இங்கே காணப்படும் சிற்பங்கள் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தனவாகும்.
மகிடாசுரமர்த்தினி சிற்பம், மாமல்லபுரம்
மாமல்லபுரத்திலுள்ள சிற்பங்களுள் மிகப் புகழ் பெற்ற சிற்பங்களுள் மகிடாசுரமர்த்தினி சிற்பம் முதன்மையானது. அங்குள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் என அழைக்கப்படும் குடைவரையில் இது செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்குப் பக்கச் சுவரின் உட்புறம் அமைந்துள்ள இந்தச் சிற்பம் நேர்த்தியாகச் அமைந்துள்ளது. மகிடாசுரனை வதம் செய்ய வரும் மகிடாசுரமர்த்தினி என அழைக்கப்படும் சக்தி, பத்துக் கைகள் உடையவளாய் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சக்தியின் பத்துக் கைகளிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தியபடி பூதகணங்களும் காணப்படுகின்றன. எருமைத் தலை கொண்ட மகிடாசுரன், கதாயுதத்துடன் சத்தியை எதிர்ப்பதும், இரண்டு படைகளும் மோதுகின்ற காட்சியும் உயிர்ப்புடன் அமைந்துள்ளன.
அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்
அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பல வகையானவற்றையும் சித்தரிக்கின்ற இச் சிற்பம் ஏதோ ஒரு புராணக் கதை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. எனினும் இது குறிக்கின்ற நிகழ்வு எது என அடையாளம் காண்பதில் ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
சுமார் முப்பது மீட்டர் வரை உயரமும், அதன் இரண்டு மடங்கு வரையிலான நீளமும் கொண்ட இப் பாறை இயற்கையிலேயே நடுவில் பிளவு பட்டிருப்பது போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. இதை ஒரு குறைபாடாக எடுத்துக்கொள்ளாது, இப்பிளவையும் சிற்பத் தொகுதியின் கருத்துருவுக்கு அமையத் திறமையாகச் சிற்பி பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இது ஒரு ஆறு அல்லது நீரோட்டமாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. நிலைக்குத்துத் திசையில் சிற்பத்தொகுதி நான்கு படைகள் (layers) அல்லது நிலைகளாகக் கருதி வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலிருந்து பார்க்கும்போது முதல் நிலை விண்ணுலகையும், இரண்டாவது விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடைப்பட்ட நிலையையும், மூன்றாவது மண்ணுலகையும், அடியில் உள்ளது பாதாள உலகத்தையும் குறித்து நிற்பதாகக் கூறப்படுகின்றது.
இச் சிற்பத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி தவமிருக்கும் ஒரு மனித உருவமும், அவனுக்கு அருகில், சூலாயுதத்தை ஏந்தியபடி, பூதகணங்கள் புடைசூழ நின்று வரமளிக்கும் சிவனும் செதுக்கப்பட்டுள்ளது. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக அருச்சுனன் சிவனை நோக்கித் தவமிருந்த கதையைக் குறிப்பதாகக் கருதிச் சிலர் இதனை அருச்சுனன் தபசு என அழைக்கின்றனர். வேறு சிலர் இது பகீரதன் தவம் என்கின்றனர். தனது முன்னோருக்கு இறுதிக்கிரியைகள் செய்ய விரும்பிய பகீரதன், ஆகாயத்திலிருந்து கங்கையைக் கொண்டுவர விரும்பினானாம். ஆனால் கங்கை வேகமாகப் பூமியில் விழுந்தால் உலக அழிவு ஏற்படும் என அஞ்சிய அவன் அதனைத் தடுப்பதற்காகச் சிவனை நோக்கித் தவமிருந்தானாம். சிவன் கங்கையைத் தன் தலையில் ஏந்தி மெதுவாகப் பூமியில் விழச் செய்தார் என்பது புராணக்கதை. இதுவே இச் சிற்பத்தின் கருப்பொருள் என்பது அவர்கள் கருத்து.
No comments:
Post a Comment