Wednesday, June 9, 2010

தொடர்வண்டிப் போக்குவரத்து



ஜெர்மன் நகரிடை வேகத் தொடர்வண்டி

அமெரிக்காவின் BNSF தொடருந்துச் சரக்குச் சேவை

தொடர்வண்டிப் போக்குவரத்து என்பது, பயணிகளையும், சரக்குகளையும் இருப்புப்பாதைகளின் மீது ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்ட உந்துகள் மூலம் வெவ்வேறு இடங்களுக்கு இடையே கொண்டு செல்வதைக் குறிக்கும். ஏற்பாட்டியல் சங்கிலியில் (logistics chain) தொடர்வண்டிப் போக்குவரத்து ஒரு பகுதியாகும். இது உலக வணிகத்துக்கு உதவுவதுடன், பல நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக உள்ளது. பொதுவான இருப்புப் பாதைகள் இரண்டு தண்டவாளங்கள் ஒன்றுக்கு ஒன்று இணையாகப் பொருத்தப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். தண்டவாளங்கள் உருக்கினால் (எஃகு) செய்யப்பட்டவை. இவை வரிசையாகக் குறிப்பிட்ட இடைவெளி விட்டு ஒன்றுக்கொன்று இணையாக அடுக்கப்பட்டுள்ள குறுக்குக் குற்றிகள் மீது பொருத்தப்பட்டிருக்கும். இம் முழு அமைப்பும் அசையாது நேராக இருப்பதற்காக இவற்றுக்குக் கீழ் சல்லிக் கற்கள் அல்லது காங்கிறீட்டுக் கொண்டு உறுதியான அடித்தளம் இடப்பட்டிருக்கும்.

இப் பாதையில் ஓடும் உந்துக்களுக்கு உருக்காலான சில்லுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை வழமையான சாலைகளில் செல்லும் வண்டிகளிலும் குறைந்த உராய்வுடன் ஓடுகின்றன. தொடர்வண்டிப் பொறிகள் வண்டிகளை இழுப்பதற்கு, தமது சில்லுகளுக்கும் தண்டவாளங்களுக்கும் இடையேயுள்ள தொடு புள்ளிகளில் இருக்கும் ஒட்டும் தன்மையிலேயே தங்கியுள்ளன. பொறிகளின் சுமையின் ஒரு பகுதி சில்லுகளினூடாகத் தண்டவாளங்களுக்குக் கடத்தப்படுவதனாலேயே இந்த ஒட்டும் தன்மை உண்டாகிறது. பொதுவான உலர் நிலைமைகளில் இது போதுமானது. ஆனால், ஈரத்தன்மை, எண்ணெய்த்தன்மை, பனிக்கட்டி, காய்ந்த இலைகள் என்பன இந்த ஒட்டுந்தன்மையைக் குறைக்கவோ இல்லாமலாக்கவோ கூடும்.

No comments:

Post a Comment